Skip to main content

சென்ற நூற்றாண்டில் தோன்றிய மஸீஹ்(அலை) அவர்களின் அழகிய போதனை!

நீங்கள் பெரியவர்களாயிருந்தால் சிறியவர்களிடம் அன்பைக் காட்டவேண்டுமே ஒழிய அவர்களை ஏளனம் செய்யக்கூடாது. நீங்கள் அறிவாளிகாக இருந்தால் அறிவீனர்களுக்கு அறிவூட்ட வேண்டுமே ஒழிய அவர்களை அவமதிக்க கூடாது. நீங்கள் பணம் படைத்தவர்களாக இருந்தால் ஏழை எளியவர்களுக்கு உதவிட வேண்டுமேயொழிய தற்பெருமை கொண்டு அவர்களை இழிவுபடுத்தக் கூடாது. நாசத்தின் வழியைக் கண்டு பயப்படுங்கள். இறைவனுக்கு அஞ்சி அவனை வழிபட்டு வாருங்கள். படைப்பினங்களை வணங்காதீர்கள். எல்லாம்வல்ல இறைவனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். உலகின்மீது மிகுந்த பற்று கொண்டு விடாதீர்கள். இறைவனுக்காக வாழுங்கள். அவனுக்காகவே ஆகிவிடுங்கள். அவனுக்காக, பாவங்களையும் அசுத்தமானவற்றையும் வெறுத்து ஒதுக்குங்கள். ஏனெனில், இறைவன் தூய்மையானவனாக இருக்கின்றான். நீங்கள் இறைபக்தியுள்ளவர்களாக இரவைக் கழித்ததாக ஒவ்வொரு பகலும் நீங்கள் இறைவனுக்கு அஞ்சியே பகலைக் கழித்ததாக ஒவ்வொரு இரவும் சான்று கூறட்டும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையைப்போல் மறைந்துவிடும் இவ்வுலகத்தின் சாபத்தைக்கண்டு பயப்படாதீர்கள். ஏனென்றால் அதற்குப் பகலை இரவாக்க முடியாது. வானத்திலிருந்து இறங்கும் இறைவனுடைய சாபத்திற்கே நீங்கள் அஞ்ச வேண்டும். அந்தச் சாபம் யார்மீது விழுமோ அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமே ஏற்படும். வெறும் வெளிவேஷத்தால் உங்களால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது. ஏனெனில் உங்களுடைய இறைவனின் பார்வை மனிதனின் அடிமட்டம்வரை ஊடுருவிச் செல்லக்கூடியது. உங்களால் இறைவனை ஏமாற்றிவிட இயலுமா? எனவே நீங்கள் நேர்மையாளர்களாக வாழுங்கள்! தூய்மையாளர்களாக விளங்குங்கள்! ஓர் அணுவளவாவது இருள் உங்களிடத்திலே இருந்தால் உங்களுடைய ஒளியனைத்தையும் தொலைத்துவிடும். உங்களில் எள்ளளவாவது கர்வம்,சுயநலம்,சோம்பெறித்தனம்,வெளிவேஷம் ஆகியன இருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டீர்கள். சில விஷயங்களை மட்டும் செய்துவிட்டு நாங்கள் செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டோம் என்று நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் ஒரு முழுமையான ஆன்மீக மாற்றம் உங்களிடத்திலே ஏற்பட வேண்டுமென்றே இறைவன் விரும்புகின்றான். அதற்குபிறகு அவன் உங்களை வாழவைப்பான். நீங்கள் ஒருவரோடொருவர் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சகோதரருடைய குற்றத்தை மன்னியுங்கள்! தன்னுடைய சகோதரனுடன் சமாதானமாக வாழவிரும்பாத மனிதன் துஷ்டனாக இருக்கின்றான். வேற்றுமைகளை ஏற்படுத்துகின்ற மனிதன் வெட்டுண்டு போவான். உங்களுடைய மனவிகாரங்களை ஒழித்துக்கட்டுங்கள். ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாதீர்கள். நீங்கள் உண்மையாளராக இருந்தாலும் உங்களை அடிமட்டத்தில் உள்ளவராகவே எண்ணிக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். தற்பெருமையையும் அகங்காரத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் அழைக்கப்படவிருக்கின்ற வாசல் வழியாக தற்பெருமையுள்ளவனும் அகங்காரம் கொண்டவனும் நுழையவே முடியாது. இறைவன் புறமிருந்து வெளியாகி என்னால் கூறப்பட்ட இவ்வசனங்களை ஏற்றுக் கொள்ளாத மனிதன் பேறிழந்தவனாக இருக்கிறான். விண்ணில் இறைவன் உங்களை நேசிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் ஒரே வயிற்றில் பிறந்த இரு சகோதரர்களைப் போல் ஆகிவிடுங்கள். உங்களிடையே கண்ணியத்திற்குரியவர் தன்னுடைய சகோதரனின் தவறுகளை மன்னிக்கிறவரேயாவார். பிடிவாதம் கொண்டு அவ்வாறு மன்னிக்கத் தவறுகின்றவர் பாக்கியமற்றவர்கள். அத்தகையவரோடு எனக்கு எவ்வித உறவுமில்லை. இறைவனுடைய சாபத்திற்கு மிகமிக அஞ்சுங்கள். ஏனெனில் அவன் தூய்மையானவனும் அன்புடையோனுமாக இருக்கின்றான். மோசமான விளைவை ஏற்படுத்துகின்ற கெட்ட குணங்களுள்ள ஒருவனால் இறைவனை அணுக இயலாது. அகம்பாவமும் கர்வமும் நிறைந்த ஒருவனால் அவனை அடையவே முடியாது. அநியாயக்காரனால் அவனை அணுக முடியாது. நம்பிக்கைத் துரோகியாலும் அவனை நெருங்க முடியாது. அவனுடைய திருநாமங்களை உணர்ந்து பயபக்தியாக நடக்காதவன் அவனை ஒருபோதும் நெருங்க முடியாது. உலகின் மீது நாய்களைப் போலவும் எறும்புகளைப் போலவும் கழுகுகளைப் போலவும் விழுகின்றவர்களும் உலக சுகபோகங்களில் மூழ்கியிருப்பவர்களும் இறைவனின் திருச்சன்னதியை அடைதல் என்பது அறவே சாத்தியமற்றதொன்று! தூய்மையற்ற ஒவ்வொரு கண்ணும் அவனைவிட்டும் வெகுதூரம் அகன்று போனதாகும். தூய்மையற்ற எந்த உள்ளமும் அவனை அறியாது. எவர் இறைவனுக்காக நெருப்பில் வீழ்வாரோ அவர் அதிலிருந்து காப்பாற்றப்படுவார். எவர் இறைவனுக்காக அழுவாரோ அவரே பிறகு சிரிப்பவராக மாறுவார். எவர் அவனுக்காக உலகிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வாரோ அவருக்கு அவ்வுலகம் கிடைக்கும். நீங்கள் உளப்பூர்வமாக, தூய்மையாக, தீவிரமாக இறைவனுடன் நட்பு கொள்வீர்களாயின் அவனும் உங்களுடைய நண்பனாக ஆகிவிடுவான். உங்கள் மனைவிமார்கள் மீதும் உங்களுடைய ஏழைச் சகோதரர்கள் மீதும் நீங்கள் கருணை காட்டுங்கள். அப்போதுதான் வானத்தில் உங்களுக்கு கருணை காட்டப்படும். உண்மையாகவே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால் இறைவனும் உங்களுக்காக ஆகிவிடுவான். இவ்வுலகு ஆயிரக்கணக்கான ஆபத்துகள் நிறைந்த இடமாக இருக்கிறது. பிளேக் என்னும் கொடிய நோய் அந்த ஆபத்துகளில் ஒன்றாகும். நீங்கள் உளப்பூர்வமான இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருங்கள். அப்போதுதான் இந்த ஆபத்துக்களை இறைவன் உங்களிடமிருந்து அகலச் செய்வான. வானத்திலிருந்து ஆணை பிறக்காமல் பூமியில் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. வானத்திலிருந்து கருணை இறங்காமல் பூமியில் ஏற்பட்ட ஆபத்து நீங்குவதுமில்லை. எனவே கிளையை பிடிக்காமல் ஆணிவேரைப் பற்றிப்பிடிப்பதுவே புத்திசாலித்தனமாகும்.

(நூல்: கிஸ்திநூஹ்)

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...