Friday, August 19, 2022

ஜும்ஆ(குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்''

05 ஆகஸ்ட் 2022~06 முஹர்ரம் 1444ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "ஜும்ஆ (குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பில் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாம் சமூக வாழ்க்கையை சிறப்பிக்கும் ஒரு மார்க்கமாகும். ஐந்து நேரக் கடமையானத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை ஒன்று கூடுவதற்காக அழைக்கப்படுகிறார்கள். இந்த சந்திப்புகள் அவர்கள் ஒருவரை யொருவர் நன்கு அறிந்து கொள்ளவும், ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்கவும், அவசியப்பட்டால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கும் அனுமதிக்கின்றன. உண்மையில, இந்த சமூக இயல்பை மிகவும் சிறப்பிக்கும் நாள் வெள்ளிக் கிழமையாகும். இது முஸ்லிம்களின் மிகவும் போற்றுதலுக்குரிய நாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் முஸ்லிம் நாடுகளில் வாராந்திர விடுமுறை விடப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை என்பது நமக்கு -மனிதகுலத்திற்கு முக்கியமான ஒரு முதன்மைச் செய்தியாகும். ஏனென்றால் இந்த நாளில் தான் தனித்துவம் மிக்கப் படைப்பாளனாகிய அல்லாஹ்(தபாரக) முதல் மனிதராகிய ஆதம்(அலை) அவர்களைப் படைத்தான். ஒரு ஹதீஸில், ஹஸ்ரத் அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை[தீங்கு விளைவிக்கும் விஷயங்களை] செவ்வாய் கிழமையன்றும், ஒளியை புதன் கிழமையன்றும் படைத்தான். வியாழக் கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்" என்று கூறினார்கள். (முஸ்லிம்)

வெள்ளிக்கிழமையை வேறு எந்த நாளுடனும் ஒப்பிட முடியாத மற்ற நிகழ்வுகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அதில் ஐந்து சிறப்புகள் உள்ளன: அன்று தான், ஆதம்(அலை) அவர்களை அல்லாஹ் (தபாரக) படைத்தான். அதுமட்டுமல்ல, அல்லாஹ் (தபாரக) தன் அடியாருக்கு அநியாயமான ஒன்றைக் கேட்பதை தவிர உள்ள அனைத்தையும் வழங்குகின்ற ஒரு மணி நேரம் அதில் இருக்கிறது. இறுதி நேரம் அந்த நாளில்தான் தோன்றும் வானவர்கள், வானங்கள், பூமி, காற்றும் மலைகளும் அஞ்சக்கூடிய நாள் வெள்ளிக்கிழமையாகும். (இப்னு மாஜா)

இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் அரேபியர்களிடையே "அருபா" என்று முன்னர் அறியப்பட்டது, முஸ்லிம்களின் ஒன்றுகூடும் நாளை குறிப்பிடுகின்றது இஸ்லாத்தின் வருகையுடன் வெள்ளிக் கிழமை "யௌமுல் ஜுமுஆ" என மறுபெயரிடப்பட்டது.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு, பண்டைய வேதங்களின் மக்களுக்கு மத்தியில் வாரத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை இறை வணக்கத்திற்காக அர்ப்பணித்து அதை அந்த சமூகத்தின் சின்னமாக ஏற்றுக்கொள்வது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. யூதர்கள் "சபாத்தை" (சனிக்கிழமையைத்) தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் இந்த நாள் ஃபிர்அவ்னின் சர்வாதிகாரத்தில் இருந்து இஸ்ரவேல் சந்ததியினரின் விடுதலையைக் குறிக்கிறது. மறுபுறம், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்தனர்.

இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவர்களது இந்த நாளைப் பற்றி அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர், ஆனால் அல்லாஹ் நம்மை அதன் பக்கம் வழிகாட்டினான், நமக்கு அது வெள்ளிக்கிழமை ஆகும்; அடுத்த நாள் யூதர்களுக்கும், அதைத் தொடர்ந்த மற்ற நாள் கிறிஸ்தவர்களுக்கும் ஆகும். (முஸ்லிம்)

அல்லாஹ், அவனாலேயே வெள்ளிக் கிழமையைப் பரிந்துரைத்த பாக்கியம் இஸ்லாமியர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் மறு உலகிலும் கூட அவர்களை (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை) நாம் முந்திச் செல்வோம் என்பதாகும். சுவர்க்கத்தில் வசிப்பவர்களுக்கு வெள்ளிக்கிழமை ஓர் ஈடு இணையற்ற நாளாக இருக்கும்.

அனஸ்(ரலி) அவர்களின் கூற்றுப்படி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சுவர்கத்தில் ஒரு சந்தை உள்ளது. அங்கே ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மக்கள் வருவார்கள். வடக்கு காற்று வீசி அவர்களின் முகம் மற்றும் ஆடைகளில் நறுமணத்தைப் பொழியும், அதன் விளைவாக, அவர்களின் அழகையும் கவர்ச்சியையும் அது அதிகப்படுத்தும். பின்னர் தங்களின் அழகிலும், கவர்ச்சியிலும் அதிகரித்தத் தங்களின் மனைவிகளிடம் அவர்கள் திரும்புவார்கள், மேலும் அவர்களது குடும்பத்தினர் அவர்களிடம் கூறுவார்கள்: 'எங்களை விட்டுப் பிரிந்ததில் இருந்து நீங்கள் அழகிலும் கவர்ச்சியிலும் பெருகியுள்ளீர்கள் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறோம்!.’ அப்போது அவர்கள் பதிலளிப்பார்கள்: ‘நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து நீங்கள் அழகிலும் கவர்ச்சியிலும் அதிகரித்துள்ளீர்கள்!." (முஸ்லிம்)

“يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக (பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளிவாசலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல்- ஜுமுஆ 10-11).

இந்த குறிப்பிட்ட வசனங்கள் உள்ள இந்த அத்தியாயம், அதாவது சூரா அல்-ஜுமுஆ, ஹிஜ்ரிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இறக்கப்பட்டது. அது அனைத்து முஸ்லீம்- நம்பிக்கை கொண்டவர்களுக்கும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கும், வெள்ளிக்கிழமைத் தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. மேலும் வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள் மற்றும் தொழுகைகளில் கலந்துக் கொள்வதைக் கட்டாய கடமையாக்கிக் கொண்டு [முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய] - அவர்கள் அனைவருக்கும் கட்டளையிடுகிறது. உண்மையில், மிகவும் முக்கியமான இந்த விஷயத்தைப் பற்றி கடந்த காலத்தில் நான் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன்.

கூடுதலாக, அனைத்து பரிவர்த்தனை- வியாபாரங்களின் தடை மற்றும் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மீதுள்ள ஆர்வத்தைப் பற்றியும் வலியுறுத்துகிறது. நம்பிக்கை கொண்டவர் வெள்ளிக்கிழமை களில் முன்னதாக பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு கடும்முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ஜும்ஆத் தொழுகைக்காக முன்பாகவே (அங்கே) இருப்பது ஒரு சிறந்த நற்பண்பு ஆகும்.

ஈமான் கொண்டவர், பள்ளிவாசலுக்கு செல்லும் வழியில் இருந்து, தொழுகை நேரம் வரை அவர் வெள்ளிக்கிழமையில் இறைவனின் அழைப்புக்கு பதிலளிக்கிறார் என்பதையும், அதனால் அவனுடைய மன்னிப்பையும் திருப்தியையும் விடாமுயற்சியுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக எவர் முதல் மணி நேரத்தில் செல்வாரோ அவர் ஒட்டகத்தை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துவது போலவும், எவர் இரண்டாவது மணி நேரத்தில் செல்வாரோ அவர் பசுவையும், மூன்றாவது நேரத்தில் செல்பவர் ஆட்டுக்கடாவையும், நான்காவது மணி நேரத்தில் செல்பவர் ஒரு கோழியையும் ஐந்தாம் மணி நேரத்தில் செல்பவர் ஒரு முட்டையையும் காணிக்கை செலுத்துவதற்கு ஒப்பாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் அதன் மதிப்பைக் குறித்து அறிந்திருந்தால் அந்த மூன்று விஷயங்களுக்காக ஒட்டகத்தைப் போல ஓடுவார்கள் (அவை): தொழுகைக்கான அழைப்பு, முன் வரிசை மற்றும் வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காக அதிகாலையில் செல்வது ஆகியவை.”

[இஸ்லாத்தின்] முதல் நூற்றாண்டில், விடியற்காலையில் மக்கள் நிறைந்துள்ள பாதைகளை உங்களால் காண முடியும், அவர்கள் பெருநாள் (ஈத்) நாட்களில், பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில் ஒருவரையொருவர் பின்தள்ளிக் கொண்டு சென்றனர். பிறகு, இந்த நிகழ்வு மறைந்துப் போனது. ஒருவர் (இவ்வாறு) கூறலாம்:

'வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அதிகாலையில் செல்வதை நிறுத்துவதே இஸ்லாத்தில் ஏற்பட்ட முதல் பித்-அத் நவீனமாக இருந்தது.'

யூதர்களும் கிறிஸ்தவர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யூத கோவில்களுக்கும் தேவாலயத்திற்கும் அதிகாலையில் விரைந்து செல்கின்றனர் என்ற உண்மை குறித்து முஸ்லிம்கள் எவ்வாறு வெட்கப்படாமல் இருக்கின்றனர்?மேலும் இவ்வுலகின் பொருட்களைத் தேடி அதிகாலையில் சந்தைக்குச் சென்று விற்கவும், வாங்கவும் லாபம் ஈட்டவும் செய்பவர்களை விட சுவர்கத்தைத் தேடக் கூடியவர்கள் எவ்வாறு காலையில் எழாமல் இருப்பார்கள்?

மிகவும் கண்டிக்கப்படும் ஒரு ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுகையில் இருந்து மிகவும் சோம்பேறித்தனம் மற்றும் அலட்சியம் காரணமாக விலகி இருக்கும் அனைவரையும் எச்சரித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபு அல்-ஜாத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு மனிதன் அலட்சியத்தால் மூன்று ஜும்ஆக்களை (தொடர்ச்சியாக) மேற்கொள்ளாவிட்டால், அல்லாஹ் அவருடைய இதயத்தை முத்திரையிடுகிறான், மேலும் அவரால் நற்செயல்களைச் செய்ய முடியாமல் ஆகிவிடும்." (அபு தாவூத்)

இந்த நாளில் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரவும், நமது நேசத்திற்குரிய நபி(ஸல்) அவர்களின் மீது அதிகமதிகம் தரூத் ஷரீஃப்- பை ஓதிடவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஸ் இப்னு அவ்ஸ் அறிவிக்கின்றார்கள்: “உங்களது நாட்களில் மிகவும் சிறப்பானது வெள்ளிக்கிழமை ஆகும்; அதனால் அந்த நாளில் என்மீது அதிகம் (ஸலவாத்) அருள்களைப் பொழியுமாறு வேண்டிக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்களது (அந்த ஸலவாத்) அருள்களைப் பொழியுமாறு கூறும் வேண்டுதல் எனக்கு சமர்ப்பிக்கப்படும். அவர்கள் (நபித்தோழர்கள்) கேட்டனர்: "அல்லாஹ்வின் தூதரே, உங்கள் உடல் சிதைந்துவிட்ட நிலையில், எங்களது ஸலவாத் (தரூத்) உங்களுக்கு எவ்வாறு சமர்ப்பிக்க முடியும்?" இதற்க்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நபிமார்களின் உடல்களை உண்பதிலிருந்தும் அல்லாஹ் பூமியைத் தடைசெய்து விட்டான்". (அபு தாவூத்)

எனவே, நீங்கள் அனைவரும் வெள்ளிக் கிழமை தொழுகைக்கான அழைப்பிற்கு பதிலளியுங்கள். ஜும்ஆவை (அதாவுது வெள்ளிக் கிழமையை) உங்களது ஒழுக்க நெறிமுறைகளில் உறுதியாக நிலைநிறுத்துகின்ற ஒரு மார்க்க நாளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மஸ்ஜித் -துக்குச் செல்ல, நீங்கள் உங்களது வேலையிலிருந்தவாறே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு மஸ்ஜித் -துக்குத் தயாராகும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகளை அழிவிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும், அல்லாஹ் (தபாரக்) கூறுகிறான்:

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ ‎﴿٢﴾‏ وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

''அவனே எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்கு - அவர்கள் இதற்கு முன்னர் தெளிவான வழிகேட்டில் இருந்த போதிலும் - அவனது கட்டளைகளைப் படித்துக் காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும், நுட்பமான அறிவையும் கற்றுக் கொடுக்கும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பினான். மேலும் இதுவரை அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்). அவன் வல்லமை மிக்கவனும், நுண்ணறிவுள்ளவனு மாவான்.'' (அல்-ஜுமுஆ 62:3-4)

இவ்வசனம் அருளப்பட்டதும், உம்மியீன்களுக்கு (அரேபியர்களுக்கு) மத்தியில் ஒரு தீர்க்கதரிசி வந்ததைப் போல, ஆக்கிரீன்களிடையே (அதாவது, மற்றவர்களிடையே - இறுதி நாட்களில்) நபி வரப் போகிறார் என்ற அறிவிப்பைக் கேட்டு ஹஸ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். (அபூஹுரைரா (ரலி)) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்: “மன் ஹும் யா ரஸுல்லல்லாஹ்?” (அல்லாஹ்வின் தூதரே, அவர்கள் யார்?), நான் (அபூஹுரைரா(ரலி) அவர்கள்) மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்கும் வரை, நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. அப்போது பாரசீகரான ஸல்மான் ஃபார்ஸி(ரலி) அவர்கள் எங்களுடன் இருந்தார். எனவே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சல்மான் ஃபார்ஸி(ரலி) [பாரசீக ஈரானியரான] அவர்களின் மீது தனது கையை வைத்து, இவ்வாறு கூறினார்கள்:

“ஈமான் சுரையா நட்சத்திரம் வரை சென்றாலும், ஒருவர் அல்லது பலர் (ஒருவரையா அல்லது பலரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறினார்களா அபு ஹுரைரா(ரலி) அவர்கள் மறந்து விட்டார்கள்) அவரது குடும்பத்தினர் (அதாவது, பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தவர்) அதை மீண்டும் கொண்டு வருவார். (புகாரி)

இந்த ஹதீஸிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றது :

1) ஒரு நாள் வரும், அந்த நாளில் முஸ்லீம்களின் இதயங்களில் இருந்து ஈமான் பிரிந்து சென்றுவிடும், அதாவது அவர்களின் மார்க்கத்தின் நிலை மிகவும் பலவீனமாக மாறிவிடும்.

2) மார்க்க நம்பிக்கை வலுவிழந்துப் போகும் இந்தக் காலத்தில் ஃபாரசீக வம்சத்திலிருந்து ஒருவர் தோன்றுவார். அவர் இறைவனிடமிருந்து வந்த ஒரு தூதராகவும், பிரதிநிதியாகவும் இருப்பார். அவர் முஸ்லிம்களின் இதயங்களில் புதிய நம்பிக்கையை ஊட்டுவார்.

இவ்வாறு, சூரா அல்-ஜுமுஆவின் வசனங்கள் 3-4 மூலம் வலுப்படுத்தப்பட்ட இந்த ஹதீஸ், பிற்காலத்தில் மேன்மை மிக்க ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களது ஒரு சிறந்த பிரதிநிதியின் மூலமாக (மீண்டும்) நடைபெறும் அதே ஆன்மீக நிகழ்வைக் குறிக்கின்றது. அப்படிப்பட்ட ஈமானை உயிர்ப்பிப்பவர் (சீர்திருத்தவாதி), மஸீஹ், ஃகலீபத்துல்லாஹ்வாகிய அவர் தவ்ஹீதை( அல்லாஹ்வின் ஏகத்துவத்தை) நிலைநிறுத்தவும், இஸ்லாத்தின் ஸ்தாபகர், திருத்தூதர் (எம்பெருமானார் (ஸல்)) அவர்களின் மாண்பை நிலைநாட்டிடவும் வருகைத்தருவார். திருக்குர்ஆனில் அல்லாஹ் அளித்துள்ள வாக்குறுதியின் படியும், பல்வேறு வேதங்களில் அவரைப் பற்றியுள்ள முன்னறிவிப்பின் படியும், இறைத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இத்தகைய வெளிப்பாடுகள் தோன்றியிருந்தது, (தற்போதும் உங்களுக்கு மத்தியில்)தோன்றி உள்ளது, (பிற்காலத்திலும்) இஸ்லாத்தில் தோன்ற உள்ளது. மேலும், (அவ்வாறு) கலீஃபத்துல்லாஹ் மற்றும் இஸ்லாத்தின் நம்பிக்கையை உயிர்ப்பிப்பவர் தோன்றும்போது, ​​யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போன்று நடந்து கொள்வதற்கெதிராக முஸ்லிம்களுக்கு சூரா ஜுமுஆ கடுமையான எச்சரிக்கையையும் வழங்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆஹிரீன்கள் யார்?" என்பதை வெளிப் படுத்தியது சுவாரஸ்யமானதாகும், அதாவது, இறுதிக் காலத்தில் உம்மிய் யீன்களை (எழுத்தறிவற்ற அரேபியர்களைப்) போலவே நம்பிக்கையற்றவர்களாக மாறிவிடுவார்கள், மேலும் ரசூலன் (இறைத்தூதர்) ஆக யார் வருவார்கள் என்பதையும் அன்னார் வெளிப் படுத்தினார்கள். அவர்கள் அதாவது இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: அன்னாருடைய அல்ஹே பைத்தின் [அதாவது (அவ்வாறு வருகைத் தருபவர்) அன்னாரது வீட்டின்/குடும்பத்தின்)] உறுப்பினராக (அதாவது அன்னாரை முழுமையாகப்) பின்பற்றிய வராக இருப்பார்.

என் சகோதர சகோதரிகளே!, இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அவனே இதற்கு வாக்குறுதியளித்துள்ளான். அவன் எப்போதும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறான். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

Wednesday, August 17, 2022

உம்மத்தின் நோய்கள் (பகுதி 3)

17 ஜூன் 2022 | 16 துல் கஃதா 1443 ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "உம்மத்தின் நோய்கள் (பகுதி 3)" என்ற தலைப்பில் தனது ஜும்மா பேருரையை நிகழ்த்தினார்கள்.

காரணங்கள்

முதல் காரணம்:

பொதுவாக தப்லீக் பணி என்பது உலமாக்களுக்கான பொறுப்பு என்று நாம் நினைக்கிறோம். ஆனால், குர்ஆனில் உள்ள கட்டளைகள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொருந்தும் என்பதைத் தெளிவுப் படுத்துகிறது. இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வது (அதாவது, தாவா/தப்லீக் செய்வது) ஒவ்வொரு முஸ்லிமின் (மீதும்) தலையாய கடமையாகும் என்பதை ஸஹாபா (ரலி) மற்றும் அதற்குப் பின் வந்த அனைத்து உண்மையான முஸ்லிம்களும் (அதாவது, தாபியீன்களும்) செய்த செயல்களும் கடின உழைப்பும் தெளிவாக நிரூபிக்கின்றன.

இந்த தப்லீக் பணியை உலமா பெருமக்ககளின் தோள்களில் மட்டும் சுமத்திவிட்டு, அது நமது பொறுப்பல்ல என்று நினைப்பது நமது பெரும் பலவீனமாகும். உண்மையை நமக்கு முன் கொண்டுவந்து, நமக்கு நேர்வழியை எடுத்துக் காட்டுவதே உலமாக்களின் பொறுப்பாகும். மனிதகுலம் அனைத்திற்கும் நல்லதைப் பரப்புவதும், அவர்களை நேர்வழியில் முன்னேறச் செய்வதும் அனைத்து முஸ்லிம்களின் (மீதும்) கடமையாகும். பின்வரும் ஹதீஸ் இதை நமக்கு தெளிவாக விளக்குகிறது,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே!. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள்/அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே!. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்!" (முஸ்லிம்)

இதை போல் மற்றொரு ஹதீஸில் வருகிறது, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் “மார்க்கம் (தீன்) என்பது நஸீஹத்(நல்லுபதேசம், நேர்மை/உண்மை) ஆகும் என்று கூறினார்கள். நாங்கள், யாருக்கு (அதனை நாடுவது)? “என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும் (அதாவது அனைத்து முஸ்லீம்களுக்கும்) “என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்)

மிகக் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காகக் கூட, இந்த பணியை உலமா பெருமக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலை மற்றும் தற்போதைய நெருக்கடியான நிலைமை இந்த கலிமாவைப் பரப்புவதற்கும், இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட நம்மை வற்புறுத்துகிறது.

இரண்டாவது காரணம்:

ஒருவர் தனது ஈமான், மற்றும் அமலில் உறுதியாகவும் நிலையாகவும் இருந்தால், மற்றவர்களுடையக் கட்டுப்படாமையும், நிராகரிப்பும், அவரை பாதிக்காது என்று பொதுவாக நாம் எண்ணுகிறோம். இந்த திருக்குரான் வசனத்தின்படி:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنفُسَكُمْ ۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ

"நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் உங்களது சொந்த ஆன்மாவிற்கு பொறுப்பாவீர்கள்! வேறு எவரேனும் வழிதவறிச் சென்றால், நீங்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றும் வரையில், அது உங்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது" (அல் - மாயிதா 5: 106)

உண்மையில், இதன் அர்த்தமும், இந்த வசனத்தின் அர்த்தமும் அதனுடன் இணைக்கப்பட்டதாகத் தோன்றவில்லை, ஏனெனில் இவ்விஷயத்தில், இது அல்லாஹ்(தபாரக்) வின் ஞானத்திற்கும் திட்டத்திற்கும் முரணாகவும், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் போதனைக்கு - அதாவது இஸ்லாத்தின் ஷரீஅத்திற்கு முரணாகவும் தென்படலாம். இங்கு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது மற்றும் புரிந்து கொள்ளப்பட்டது என்னவென்றால், முஸ்லிம்களின் முன்னேற்றமும் வெற்றியும் நாம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும், ஒரே சமூகமாக வாழ வேண்டும் என்பதில்தான் உள்ளது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படை, அதன் இன்றியமையாத கருத்தும் ஆகும். முஸ்லிம் சமூகத்தை பல அங்கத்தவர்களைக் கொண்ட ஒரே அமைப்பாகவே நாம் கருத வேண்டும். உடலின் ஒரு பகுதி, ஓர் உறுப்பு காயம் அடைந்து விட்டால் , முழு உடலும் அந்த வலியுடன், உணர்வுடன பாதிப்படைகின்றது. மனிதன், அதாவது மனித இனம் எந்த எல்லைக்கும் முன்னேற முடியும், மற்றும் அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உயர்ந்த மரியாதை மற்றும் புகழைப் பெற முடியும், ஆனால் எப்போதும் வழிதவறிச் சென்று பாவங்களில் விழும் ஒரு கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், இறையச்சமுள்ள முஸ்லிம்கள் உறுதியுடன் இருந்து, நேர்வழியில் தொடர்ந்து செல்லும் வரை, மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதற்கு இந்த வசனம் உறுதியளிக்கிறது .

இன்னொரு விஷயத்தையும் வெளிக்கொண்டு வரவேண்டி உள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் அனைத்து விதிமுறைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்போது தான் முழு வெற்றியும், மற்றும் முழுமையான நிறைவும் வரும். இதில் அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளும் அடங்கும். ஹஸ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வார்த்தைகள் இந்த விளக்கத்தை உறுதிப்படுத்துகின்றன. அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் உங்களது சொந்த ஆன்மாவிற்கு பொறுப்பாவீர்கள்! வேறு எவரேனும் வழிதவறிச் சென்றால், நீங்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றும் வரையில், அது உங்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது" (அல் - மாயிதா 5: 106)

நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன் : 'மக்கள் தவறு செய்பவரைப் பார்க்கின்ற போது, அவர்கள் அவரை (அவ்வாறு தவறு செய்வதிலிருந்தும்) தடுக்கவில்லை என்றால், விரைவில் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு தண்டனை கிடைக்கும். (பிடித்து விடுவான்)" (திர்மிதி)

நிச்சயமாக அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ

"சுமப்பவன் எவனும் மற்றவனின் சுமையை சுமக்கமாட்டான்." (ஃபாத்திர் 35:19)

மூன்றாவது காரணம்

புகழ்பெற்ற மனிதர்கள் மற்றும் சாதாரண முஸ்லிம்கள், படித்தவர்கள் மற்றும் படிக்கத் தெரியாதவர்கள் அனைவரும் சேர்ந்து சமூகத்தை சீர்திருத்துவதில் மிகவும் அலட்சியமாகவோ அல்லது ஆர்வமற்றவர்களாகவோ மாறிவிட்டனர் என்றால் எல்லோரும் தங்கள் கேடு காலத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது, அது கடினமாக இருக்கும் என்று நம்புகிறார்கள், தற்போது முஸ்லிம்கள் முன்னேறிச் சென்று, தங்களது முந்தைய கண்ணியத்தை மீண்டும் பெறுவது என்பது சாத்தியமற்றது என்று கூட கூறலாம். முஸ்லீம்களின் நிலையை மேம்படுத்திடவும் மாற்றிடவும் ஒரு திட்டம் அவர்களிடம் முன்வைக்கப்படும் போதெல்லாம், அதே எதிர்வினையையே நாம் காண்கிறோம்: முஸ்லிம்கள் தங்கள் கைகளில் நாடுகளோ, ஆட்சி செய்யும் அதிகாரமோ, செல்வமோ, நிதியோ, பொருளாதாரமோ, இராணுவம் அல்லது போருக்கான உபகரணங்களோ, அல்லது தேவையான செல்வாக்கோ இல்லாதபோது அவர்கள் எவ்வாறு முன்னேறுவார்கள்?. மேலதிகமாக, அவர்களுக்கு உடல் வலிமை, அவர்களுக்கிடையே புரிந்துணர்தல் மற்றும் அவர்களது செயலில் எந்த ஒற்றுமையும் இல்லை!

ஹிஜ்ரத்தில் இருந்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. [தற்போது நாம் ஹிஜ்ரி பதினைந்தாம் நூற்றாண்டில் இருக்கிறோம்], அதனால் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் போதனையிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறார்கள், எனவே, அவர்களும் (அதாவுது, முஸ்லிம்களும்) இஸ்லாமும் வீழ்ச்சியடைவதைத் தவிர்க்க முடியாது என்று மார்க்கவாதிகள் கூட ஏற்கனவே தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது. தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களை மாற்ற முயற்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். நாம் முன்னேற்றம் அடைந்துள்ள கால கட்டத்தில், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போதனையின் ஒளியின் தாக்கம் மேலும் மேலும் குறைந்து வருகிறது என்பது உண்மைதான், ஆனால் அந்த ஒளியை மீண்டும் பிரகாசிக்க முயற்சி செய்யக்கூடாது என்று பொருளல்ல. மாறாக, அல்லாஹ்வின் (அதாவது ஷரீஅத்) கட்டளைகளை நாம் நிலைநிறுத்தி, அதே சமயம் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த வாழ்க்கை முறையை நமது முழு ஆற்றலுடனும், தைரியத்துடனும் நிலைநாட்டுவோமாக! அப்போதுதான் அல்லாஹ்வின் உதவி அவனுடைய சர்வ வல்லமையால் நமது முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக வரும், இன்ஷா அல்லாஹ்!

இன்றைய முஸ்லீம்களைப் போலவே முந்தைய முஸ்லிம்களும் நினைத்திருந்தால், இஸ்லாத்தின் எந்தத் தடயமும் உலகின் எந்த இடத்திலும் இருந்திருக்காது, ஏனென்றால் ஷரீஅத்தின் போதனைகளும் விதிமுறைகளும் நம்மைச வந்தடைவதற்கு எந்த வழியும் (எந்த அமைப்பும்) இருந்திருக்காது. எனவே, தீன்- மார்க்கத்தின் மீதான நமது எதிர்மறையான அணுகுமுறையை நாம் மாற்றிக்கொள்ளாவிட்டால், இஸ்லாம் மரணமடைவது என்பது வெகு தொலைவில் இல்லை. நம்மையும் எதிர்கால சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்ள உறுதியான மற்றும் நேர்மறையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். காலம் விரைவாக கடந்து செல்கிறது, இஸ்லாம் மிக விரைவாக சீர்கெட்டு வருகின்றது. (இந்த இக்கட்டான) நிலைமையைத் தடுக்க உறுதியான, விரைவான மற்றும் உறுதியான முயற்சியை மேற்கொண்டு நிலைமை மேலும் மோசமடைவதையும், முஸ்லிம்களின் சீரழிந்துப் போவதைத் தடுக்கவும் (தற்போதைய) சூழ்நிலை நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது. முழுமையாக முஸ்லிம்களின் உறுதிப்பாடு மற்றும் கூட்டு முயற்சியிலும் தான் உண்மையான இஸ்லாத்தின் இருப்பு சார்ந்துள்ளது என்பது ஒரு நிறுவப்பட்ட கோட்பாடகும். இந்த விசயத்தில் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களிடம் அதிகமான குறைபாடுகள் உள்ளன என்பதுத் தெரிகின்றது. ஆயினும்கூட, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் பல வழிகாட்டுதல்கள் உள்ளன என்பதையும், அது முஸ்லீம்களை அல்லாஹ்வின் பாதையில் நிலைத்திருக்கவும், விடாமுயற்சியை மேற்கொள்ளவும் அழைக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

உதாரணமாக, தனது வாழ்நாள் முழுவதும் இபாதத் [வணக்கங்கள்/ தொழுகைகளை], இரவும் பகலும் செய்யும் மிகவும் இறையச்சமுடைய ஒருவரைப் பற்றிய ஒரு ஹதீஸ் உள்ளது, ஆனால் அத்தகைய ஒருவரால் முயற்சிகளை மேற்கொள்பவர், தனது இன்பங்களையும் வசதிகளையும் தியாகம் செய்து மக்களை வழிநடத்தி இஸ்லாத்தின் நேர்வழியில் முன்னேற உதவுபவரின் நிலையை அடைய முடியாது. இந்த குறிப்பிட்ட விஷயத்தில் குர்ஆன்-ஏ கரீமில் பல கட்டளைகளும் , வழிகாட்டுதல்களும் உள்ளன. அல்லாஹ்வின் பாதையில் எவர் முயற்சி (போர்) செய்கிறாரோ அவர், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர் உயர்ந்தவராக இருக்கிறார் மற்றும் உயர்ந்த பதவியை வகிக்கிறார் என்று

அவரை பற்றி தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது:

لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا ‎﴿٩٥﴾‏ دَرَجَاتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا ‎﴿٩٦﴾

“ஈமான் கொண்டவர்களில் எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள்! தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும், அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான். ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான். தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்;. ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அன்-நிஸா 4: 96-97)

இந்த வசனங்கள் குஃப்பார்களுக்கு (காஃபிர்களுக்கு) எதிரான ஜிஹாத் (புனிதப் போர்) மற்றும் முஷ்ரிக்கீன் (பலதெய்வவாதிகளுக்கிடையில்) இஸ்லாத்தின் போதனையை நிலைநாட்டவும், நயவஞ்சககத்தையும், ஷிர்க்கையும் (அதாவது அல்லாஹ்வின் தனித்துவமான வழிபாட்டில் மற்ற பங்காளிகளை இணை வைப்பதையும்) எதிர்த்துப்போராடவும், துரதிர்ஷ்டவசமாக இந்த உன்னதப் பணியைச் செய்ய நமக்கு வாய்ப்பு இல்லாமல் போனாலும் கூட, நம்முடைய பணி என்பது, நாம் உண்மையை பிரச்சாரம் செய்யக்கூடிய எந்த ஒரு சிறிய சந்தர்ப்பத்தையும் நாம் நம்மை விட்டும் (வெறுமனே) கடந்து செல்லுமாறு விட்டுவிடக் கூடாது. அப்போதுதான் ஒரு நாள் நமது சிறிய முயற்சிகளும் உறுதியும் நம்மை மகத்தான மற்றும் உன்னதமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு சில வலிமையையும் வேகத்தையும் பெற முடியும் என்று நம்பலாம்.

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ ‎﴿٦٩﴾‏

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (அல் அன்கபூத் 29:70).

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வாழ்க்கை முறையைப் பாதுகாப்பேன் என்று அல்லாஹ் (தபாரக்) வாக்குறுதி அளித்துள்ளான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மனிதனின் (அதாவது நம்பிக்கை கொண்ட முஸ்லிமின்) முயற்சிகளும் உறுதியும் மட்டுமே ஒரே வழிமுறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த வாழ்க்கை முறை முன்னேறவும் உயர்வடையவும் முடியும்.

ஸஹாபாக்கள் (ரலி) இந்த நோக்கத்திற்காகவே ஒவ்வொரு தியாகத்தையும் செய்திருக்கிறார்கள்; அவர்கள் வெற்றி பெற்றார்கள், மேலும் அவர்கள் பெரிய, பெரிய வெகுமதிகளையும் பெற்றார்கள். அல்லாஹ்விடமிருந்து உதவியையும் பாதுகாப்பையும் பெறும் கண்ணியத்தைப் பெற்றார்கள். அவர்கள் மீது அபிமானம் கொண்ட (போற்றுகின்ற) அனைத்து முஸ்லிம்களும் அவர்களைப் பின்பற்ற வேண்டும். மேலும் "கலிமா" மற்றும் அல்லாஹ் (தபாரக்) வின் செய்தியை பரப்புவதற்காக தயாராக வேண்டும். இந்த வழிமுறையின் மூலம் மட்டுமே அல்லாஹ் (தபாரக) வின் உதவியும் பாதுகாப்பும் நம்மை வந்தடையும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ ‎﴿٧﴾‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு (அவனது மார்க்கத்திற்கு) உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (முஹம்மத் 47:8).

நான்காவது காரணம்

இஸ்லாம் போதிக்கின்ற தனித்தன்மைகளும், நற்பண்புகளும் நம்மிடம் இல்லாததால், இந்த குணங்களை மற்றவர்களிடம் பரப்ப நம்மால் முடிவதில்லை என்று நம்மில் பலரும் நினைத்துக் கொள்கின்றோம். இது முற்றிலும் தவறாகும். நம்மீது ஒரு கடமை இருக்கும்போது, ​​குறிப்பாக அது அல்லாஹ் (தபாரக்)விடமிருந்து வரும் ஒரு கட்டளையாக இருக்கும்போது, ​​அதற்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கு எந்த காரணத்தையும் தேடுவதற்கு நமக்கு உரிமை இல்லை. இந்த பணியை நாம் உடனேத் தொடங்க வேண்டும், மேலும் அல்லாஹ்(தபாரக்)வின் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும். அதனால், நமது முயற்சிகள் அதிக வலிமையையும், பெரும் உறுதிப்பாட்டையும், [இந்த வழியில்/ வேட்கையில்/பணியில்] தொடர்வதற்கான நம்பிக்கையையும் பெற்றுத் தரும்.இன்ஷா-அல்லாஹ்.

இந்த வழியில்,​​ தேவைப்படும் வரிசைப் பிரகாரம் (கோட்பாட்டின்படி), நாம் தொடர்ந்து ஒரு நிலையான முயற்சியை மேற்கொள்ளும்போது,அல்லாஹ் (தபாரக்) வுக்கு "பிடித்தவர்கள்" ஆக மாறிவிடும் கண்ணியம் நமக்கு கிடைக்கும். அதாவது ஒரு நபர் இறைவனுக்காக (இறைவனின் தீனுக்காக) முயற்சியை மேற்கொண்டால், அந்த நபர் திறமையற்றவராக அல்லது இந்த பணியைச் செய்வதற்க்கான [தேர்ச்சிபெற்ற] தகுந்த நிலையில் இல்லை என்ற காரணத்திற்காக அல்லாஹ் (தபாரக) அந்த நபருக்கு தனது அனுகூலங்களையும் அருளையும் வழங்க மாட்டான், என்பது அல்லாஹ்வின் கோட்பாடு மற்றும் 'சுன்னத்திற்க்கு' [நடைமுறைக்கு] எதிரானதாகும். இந்தக் கருத்து இந்த ஹதீஸில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததாவது: “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம்: “அல்லாஹ்வின் தூதரே!, இந்த நற்செயல்களை நாங்களே நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் போது, நன்மையை ஏவாமல் இருப்பது பொருத்தமானதா? இந்த தீமையான செயல்களில் இருந்து எங்களை நாங்களே தவிர்த்துக் கொள்ளாமல் இருக்கும் போது, தீமையை நாங்கள் தடை செய்வது பொருத்தமானதா?"

(அதற்கு)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதில்)கூறினார்கள்: “இல்லை! இந்த அனைத்து நல்ல செயல்களை நீங்கள் செய்யவில்லை என்றாலும் கூட மற்றவர்களை நற்செயல்கள் செய்வதற்காக ஏவுங்கள்! இந்த அனைத்து தீமையிலிருந்தும் (கெட்ட செயல்களில் இருந்தும்) நீங்கள் விலகவில்லை என்றாலும் கூட தீய செயல்களை தடை செய்யுங்கள் (தப்ரானி)

ஐந்தாவது காரணம்

சந்தேகத்திற்கிடமின்றி, இன்று இருக்கக் கூடிய இந்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முற்றிலும் அவசியமானவையாகும், மேலும் அவர்கள் மீது மிகுந்த மரியாதையை நாம் கொண்டுள்ளோம், மேலும் அவர்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் இன்று நாம் காணக் கூடிய இந்த சிறிய இஸ்லாம் நிலைத்திருக்கின்றது [அதாவது இன்னும் உள்ளது] என்பதற்காக அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க ஒரு சிறிதளவு [ஒரு பகுதி அல்லது ஒரு பிரிவு] கூட அவை போதுமான அளவில் இல்லை. குறிப்பாக நாம் குறைபாடுகளையும், மோசமாகிக் கொண்டே செல்லும் முஸ்லிம்களின் தற்போதைய நிலையையும் கருத்தில் கொள்ளும்போது செய்ய வேண்டிய பணி மிகப்பெரியதாகும். இருக்கும் இந்த சில அமைப்புகளின் மீது நாம் திருப்தி கொண்டால், நாம் மிகப் பெரிய தவறு செய்கிறோம். இன்னும், தற்போதைய இந்த அமைப்புகளில் கூட, மிகப்பெரிய குறைபாடுகள் உள்ளன, முழு உம்மத்தின் நன்மையை விடவும் தங்களின் (சொந்த)நன்மைகளைத் தேடும் சில தீய எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அல்லாஹ் இந்த நூற்றாண்டில் தனது கலீஃபத்துல்லாஹ்வை அனுப்பியுள்ளான்! இன்ஷா- அல்லாஹ், உருவாக்கப்படுவதற்கு அல்லாஹ் கட்டளையிடப் போகும் அமைப்புகளின் மூலம், இன்ஷா அல்லாஹ், ஸஹீஹ் அல் இஸ்லாமான, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும், இந்த உன்னதமான பணிகளில் சிறப்பாக உதவிடும் கரங்களை நாம் வழங்க வேண்டும்

உண்மையில், இந்த அமைப்புகளிலிருந்து சரியாகப் பயனடைய, இஸ்லாத்திற்காக பணியாற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் இஸ்லாத்தின் மீது உண்மையான ஆழ்ந்த மரியாதையையும், அதைத் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமியர்களுக்கு இன்னும் இஸ்லாத்தின் மீது ஆசையும் நேசமும் இருந்தது என்று நாம் கூறலாம். மேலும் நமது [அதாவது, முந்தைய முஸ்லிம்களின்] அன்றாட வாழ்வில் இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளங்களை நம்மால் காண முடியும்.அந்த நேரத்தில், தீனின் தேவையை பூர்த்தி செய்ய இந்த அமைப்புகள் போதுமானதாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் வெளிநாட்டு சக்திகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நமது ஈமான் [நம்பிக்கை] மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எதிர்ப்புகள் ஏற்படுவதன் காரணத்தால் இஸ்லாத்திற்கான முஸ்லிம்களின் இந்த உணர்வுகள் மற்றும் ஆசைகள் அனைத்தும் மரணித்துவிட்டன.

துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றனர். இஸ்லாத்திற்கான நேசம் நமக்கு [முஸ்லிம்களிடம்] இருப்பதற்கு பதிலாக நமது தீன் மற்றும் ஈமான் (நம்பிக்கையின்) மீது நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பது போல் தோன்றுகிறது. இப்போது இழப்பதற்கு நேரம் இல்லை; நாம் விரைவாக செயல்பட வேண்டும், பகைவர்களின் கையிலிருந்து கட்டுப்பாட்டை மீட்டெடுத்து ஒவ்வொரு முஸ்லிமிலும் உள்ள அந்த மரணித்துப் போன இதயத்தை விழித்தெழச் செய்வதற்கு ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்கி நம் அனைவரிலும் இஸ்லாத்தின் மீதான நேசத்தையும், வலுவான பிணைப்பையும் பற்றவைக்க வேண்டும். (எரியச் செய்ய வேண்டும்) அப்போது மட்டுமே, மார்க்க அமைப்புகளிலிருந்து நம்மால் அதிகபட்ச பலனைப் பெற முடியும், அதன் காரணமாக (மார்க்க அமைப்புகள்) சமூகத்திற்கு இன்னும் சிறப்பாக சேவை செய்ய முடியும். நாம் உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், இந்த புறக்கணிப்பு மற்றும் சோம்பேறித்தனமான நிலைமையானது தொடர்ந்து எல்லா இடங்களிலும் பரவி, தீனின் இந்த பணிகளில் சிலவற்றைச் செய்யும் அந்த நிறுவனங்கள் (கூட) மறைந்து அழிந்து போய்விடும்.

ஆறாவது காரணம்

ஒவ்வொரு முறையும் "நன்மையை ஏவி தீமையை தடுத்தல்" என்னும் இந்த பணியை எவராவது செய்தால் அவர் மக்களிடம் இருந்து சிரமங்களை எதிர்கொள்வார் என்ற அச்சம் எப்போதும் உள்ளது. மக்கள் அவருடன் மோசமாக நடந்துகொள்கிறார்கள், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் அவரை அவமதிக்கிறார்கள். பெரும்பாலும் மக்கள் தீனின் பணியை செய்பவர்களிடம் மிகவும் வெறுக்கத்தக்க மனப்பான்மையை மேற்கொள்கின்றார்கள். இதுவே உண்மையாகும், ஆனால் தாவத்-ஏ-இல்லல்லாஹ்வின் பணியை மேற்கொள்வது என்பது எப்போதுமே மோசமான நடத்தையை அனுபவித்த தூதர்களின்(அலை) பாதையை பின்பற்றுவதாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த பணியை நிறைவேற்று பவர்களின் பழக்கமான பாதையும், விதியும் இதுவேயாகும். நிச்சயமாக, அனைத்து நபிமார்களும் (அலை) இந்த பணியின் காரணத்தால் மிகவும் மோசமான துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள்; இது இந்த வசனத்தில் தெளிவாக (சுட்டிக் காட்டப்பட்டு) உள்ளது:

وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي شِيَعِ الْأَوَّلِينَ ‎﴿١٠﴾‏ وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ ‎﴿١١﴾‏

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்தைய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.

எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.(அல்- ஹிஜ்ர் 11-12).

ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்: “சத்தியத்தைப் பரப்புவதில் என்னை விடவும் அதிகமாக எந்த தூதரும் துன்பப்பட்டதில்லை”.

எனவே, இந்த அச்சங்கள் நமக்கு இருக்கக்கூடாது என்பதுத் தெளிவாகிறது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்று கூறிக் கொள்ள நாம் விரும்புகிறோம்; அவர்களின் பணியை நிறைவேற்ற அவர்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் எப்போதும் நிறைய சபூரை [பொறுமையைக்] கடைபிடித்தார்கள் மேலும் அனைத்து சிரமங்களையும் தாராள மனதுடன் ஏற்றுக் கொண்டார்கள்.நாம் அவர்களின் அருளுக்குரிய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும், தப்லீக்கின் இந்த பணியை நாம் செய்யும் போது பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். இது இந்த நாட்களில் (மிகவும்) இன்றியமையாததாகும். இன்ஷா அல்லாஹ், ஆமீன், சும்ம ஆமீன்.

இன்ஷா அல்லாஹ், எனது அடுத்த வெள்ளிக்கிழமை குத்பாவில் இதே தலைப்பில் தொடர்வேன். இதைச் செய்வதற்கு அல்லாஹ் எனக்கு தவ்ஃபீக்கை வழங்குவானாக! மேலும் உங்கள் அனைவருக்குள்ளும் நிகழ வேண்டிய இந்த உட்புற மாற்றத்தின் பக்கம் நேர்மையான இதயங்களை தூண்டுவதில் வெற்றி பெறச் செய்வானாக!.இன்ஷா அல்லாஹ்.

Tuesday, August 16, 2022

உம்மத்தின் நோய்கள் (பகுதி 1)

03 ஜூன் 2022 / 02 துல் கஹ்தா 1443ஹி

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) தனது ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹுது, தவ்வூத் மற்றும் சூரா அல் பாத்திஹா ஓதிய பிறகு; ஹஸ்ரத் முஹையுத்தீன் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி 1) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள்.

சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அறியாமை, பாவம் மற்றும் ஒழுக்கக்கேட்டின் இருளில் உலகம் மூழ்கி இருந்த போது, உண்மையான அறிவு மற்றும் வழிகாட்டுதலின் ஒளி (மக்காவைச் சுற்றியுள்ள சிறிய மலைகளான) பத்தாவின் பாறை மலைகளுக்கு மத்தியில் அடிவானத்தில் தோன்றியது. அதன் கதிர்கள்
கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் பரவியது.. அவை பூமியின் ஒவ்வொரு மூலையையும் ஒளிரச் செய்துள்ளன; குறுகிய காலத்தில் [இருபத்தி- மூன்று வருடங்களில்], இந்த ஒளி மனிதன் முன்னர் ஒருபோதும் அடைந்திராத உயர்ந்த பதவிகளை அடைவதற்கு வழி வகுத்துள்ளது. இது முஸ்லிம்களை மூட நம்பிக்கையிலிருந்து அகற்றி உண்மையான பாதையைப் பின்பற்றுவதற்கான ஆழ்ந்த விருப்பத்தை அவர்களில் உருவாக்கியது. இந்த ஒளியால் வழி நடத்தப்பட்டு, முஸ்லிம்கள் வெற்றிக்கு மேல் வெற்றியை அடைந்தார்கள். மேலும் அவர்கள் வரலாற்றில் மிக உயர்ந்த கௌரவம் மிக்க பதவியை வந்தடைந்தனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் மகத்துவத்துடனும், அதிகாரத் துடனும் உலகை ஆண்டனர்; அந்த நேரத்தில் வாழ்ந்த எந்த தலைவனுக்கும் (அவர்களை) எதிர்க்கும் தைரியம் இருந்ததில்லை; எப்போதாவது எந்த ஆட்சியாளராவது அவ்வாறு செய்யத் துணிந்தார் என்றால், அவர் முற்றிலுமாக அழிக்கப்படும் அபாயம் இருந்தது.

இது ஒருபோதும் எவராலும் அழிக்க முடியாத வரலாற்று உண்மையாகும். ஆனால், இன்றைய காலத்தில் இந்த வரலாற்று உண்மை ஒரு பழங்கால கதைகள் போன்று (மரபு வழிச் செய்தியாக)ஆகிவிட்டது. இதனை ஒரு கடந்த கால கதையாக கூறுவதற்கு மட்டும் நன்றாக இருக்கிறது. (ஆனால் பின்பற்றுவதற்கு அல்ல) என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். [ இன்றைய முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களின் பார்வையில் ஒரே மாதிரியாக] இது ஒரு நம்பமுடியாததாகவும் கேலிக்குரியதாகவும் தோன்றலாம்.

குறிப்பாக, தற்போதைய சூழலில், இஸ்லாத்தின் முதலாவது மற்றும் உண்மையான வீரர்களின் முன்மாதிரியான செயல்திறன் மற்றும் சிறந்த சாதனையின் மீதான முஸ்லிம்களின் (இன்றைய) நடவடிக்கையானது ஒரு பெரிய கரும்புள்ளி போன்று ஆகிவிட்டது.

முஸ்லிம்களை எந்த நோய் கடந்து வந்துள்ளது?

ஹிஜ்ரி பதின்மூன்றாம் ஆண்டு முடியும் வரை முஸ்லிம்கள் மட்டுமே மரியாதை, கண்ணியம், அதிகாரம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது. ஆனால் நாம் நமது கண்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து திருப்பி இன்றைய முஸ்லிம்களைப் பார்க்கும்போது, ​​கஷ்டங்களிலும், அவமானத்திலும் மூழ்கியிருக்கும் ஒரு சமூகத்தை நாம் காண்கிறோம், உண்மையான பலம், அதிகாரம், மரியாதை அல்லது கண்ணியம் இல்லாத, சகோதரத்துவம் இல்லாத, இஸ்லாத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் இல்லாத, மக்களைக் காண்கிறோம். ஒரு காலத்தில் ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருந்த அசாதாரணமான செயல்களின் எந்த தடயத்தையையும் நாம் இன்று காண முடியவில்லை. இப்போதெல்லாம், நாம் அரிதாகவே தூய மற்றும் நேர்மையான மனசாட்சி கொண்ட முஸ்லீமைக் காண்கிறோம். அதற்கெதிரில், முஸ்லிம்கள் தீமைகள் மற்றும் பாவங்களில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

அவர்கள் நற்செயல்களின் பாதையில் இருந்தும், வெற்றிக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்கும் பாதையில் இருந்தும், வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டனர். முஸ்லிம்களின் பலவீனங்களை மகிழ்ச்சி, கேலி மற்றும் வெறுப்புடன் இன்றைய இஸ்லாத்தின் எதிரிகள் பேசவும், விவாதிக்கவும் செய்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக பிரச்சனை அத்துடன் நிற்கவில்லை. இந்த புதிய தலைமுறையின் முஸ்லிம் இளைஞர்கள் நவீன போக்குகள் என்று அழைக்கப்படுபவைகளாலோ, இன்னும் மேற்கத்திய நாகரீகத்தினாலோ (ஃபேஷன்), ஈர்க்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மேற்கத்திய நாகரீகமானது இஸ்லாத்தின் கொள்கைகளை கேலி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் அவர்கள் ஷரீஅத்தை, இஸ்லாத்தின் தூய நெறிமுறையை வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள்; ஷரீஅத் பழமையானது என்றும் நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்களின் அத்தகைய நடத்தையால் நாம் ஆச்சரியப்படுகிறோம்! -

வலிமை, ஸ்திரத்தன்மை, செழிப்பு, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றை முழு உலகிற்கும் கொண்டு வந்த மக்கள், தற்போதோ அவர்கள் மனச்சோர்வு அடைந்தவர்களாகவும், முற்றிலும் உறங்குபவர்களாகவும், ஒன்று மற்றவர் களாகவும், ஆதரவற்றவர்களாகவும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.ஒரு காலத்தில் முழு உலகிற்கும் நல்லொழுக்கப் பாடங்களையும் நல்ல நடத்தையையும் கற்றுக் கொடுத்த மக்களோ, தற்போது இந்த நற் குணங்களில் இருந்து பின்தங்கி விட்டனர்.

நிலைமையை மாற்றுவதற்கான முதல் முயற்சிகள் நீண்ட காலமாக, அறிஞர்களும், இஸ்லாத்தின் பாதுகாவலர்களும், அவர்களது சமூகத்தின் பேரழிவுக்குரிய நிலைமையை குறித்து ஆழ்ந்து சிந்தித்து முஸ்லீம்களை சீர்திருத்துவதற்காக ஏராளமான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அவர்களின் பணியைச் செய்ய முடியவில்லை!

அவர்கள் பயன்படுத்திய தீர்வுகள் மற்றும் முடிவுகள் நோயை மேலும் மோசமாக்கியது.

நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது, வரவிருக்கும் நாட்கள் இன்னும் இருண்டதாக இருக்கும் என்பதாகத் தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டு திருப்தியாக இருப்பது பெரும் பாவமாகவும், மன்னிக்க முடியாத குற்றமாகவும் ஆகிவிட்டது. ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முடிவு எடுப்பதற்கு முன்பு, அத்தகைய ஒரு மோசமான நிலைமையை கொண்டுவரும் உண்மையான காரணத்தை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இந்த சீரழிவுக்கு மக்கள் பல காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நிலைமை இன்னும் மோசமடைவதில் இருந்து தடுப்பதற்கு பல தீர்வுகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும்
இன்னும் அதிகமான விரக்திக்கே வழிவகுத்துள்ளன. முன்னேற்றத்தின் பக்கம் செல்வதற்கு பதிலாக, குறிப்பாக பிரச்சாரம் செய்பவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மத்தியில் விரக்தியும் குழப்பமும் உள்ளே வந்துவிட்டது. உண்மை என்னவென்றால் இந்த நோய்க்கான உண்மையான வேரைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார்கள் என்பதாகும். இந்த நோய்க்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கப்படாத வரை, முஸ்லிம்களால் எந்த சிகிச்சையையும், அதைப் பயன்படுத்துவதற்கு அதற்கும் குறைவான ஒன்றை பரிந்துரைக்கவும் முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், சில நிவாரணத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ நம்மால் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நோயின் உண்மையான காரணத்தை அறியாமல் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு சிகிச்சையும் நிலைமையை மேலும் சீர்கெடச் செய்து அதிகமான குழப்பத்தையும் ஊக்கமின்மையையும் கூட கொண்டு வந்து விடும்.

பிரச்சனையை எவ்வாறு பார்க்க வேண்டும்?

‘ஷரீஅத்’ என்பது அல்லாஹ்விடம் இருந்து நேரடியாக வருகின்ற ஒரு புனிதமான செயல்முறை விதிகளாகும் என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. இது நமக்கு ஒரு முழுமையான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கான ஒவ்வொரு சாத்தியமான வழிவகைகளையும் உண்மையான வெற்றியையும், நன்மைக்கான பாதையில் முன்னேற்றத்தையும் நமக்கு வழங்குகிறது. நாம் எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும் என்பதை நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டி, அந்த பாதையை சரிபார்த்து செயல்படுத்துவதற்கான முறைகளையும் நமக்குக் கூறுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹம்மதிய்ய உம்மத்தின் ஷரீஅத்தானது அனைத்து முஸ்லீம்களின் பௌதீக மற்றும் ஆன்மீக நல்வாழ்விற்கும், வாழ்நாள் முழுவதும் எல்லா சந்தர்ப்பங்களிலும், ஏன் கியாமத் நாள் வரை அவர்களின் முன்னேற்றத்திற்கும் முழு உத்திரவாதம் வழங்குகின்றது. ஷரீஅத்தின் விதிமுறைகளுக்கும் அப்பால் (சென்று), மோசமடைந்துள்ள இந்த தற்போதைய சூழ்நிலையின் காரணத்தையும் தீர்வையும் நாம் தேடினோம் என்றால், நாம் நமது நேரத்தை இழக்க நேரிடும் என்பதுத் தெளிவாகிறது. எனவே, நாம் அவசியமாக குர்ஆன்-ஏ-கரீமை ஆழமாக ஆராய வேண்டும். குர்ஆன்- அதுவே ஷரீஅத்தின் அடிப்படையும் அனைத்து ஞாணங்கள் மற்றும் மனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டுதலின் மூலாதாரமும் ஆகும்.

நிச்சயமாக மனிதனுக்கான ஞானத்தின் ஒரே மூலாதாரம் குர்ஆன் மட்டுமே ஆகும். நாம் நமது நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் நாம் நமது சிரமங்கள் என்ன என்பதை கண்டுபிடித்து அதனை எவ்வாறு அகற்றுவது என்பதற்கு நாம் குர்ஆனின் உதவியை நாட வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்தவுடன் நாம் தீர்வைப் புரிந்துகொண்டு அதைப் பயன் படுத்துவதற்கு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். குர்ஆனின் ஞானமும் வழிகாட்டுதலும் குறிப்பாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் தற்போதைய சூழலிலும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நம்மை ஒருபோதும் கைவிடாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் குர்ஆன் மற்றும் சுன்னத்தில் உள்ள உண்மையான தீர்வை [சிகிச்சையைத்] தேடுவோம்.

பிரச்சினைகளை நாம் ஆராய்வோம்!

முழு பிரபஞ்சத்தின் படைப்பாளனாகிய அல்லாஹ் (தபாரக்), ஆட்சி செய்யும் அதிகாரத்தையும், பூமியில் மீதான கிலாஃபத்தையும், உண்மையான முஸ்லிம்களுக்கு அதாவது முஃமீன்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். இது திருக் குர்ஆனின் இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது:

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை பூமியில் நிச்சயமாக கலீஃபாக்களாக்கி வைப்பதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்திருக்கிறான்". (அந் நூர் 24:56)

உண்மையான நம்பிக்கையாளர்கள் எப்போதும் நிராகரிப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற உத்தரவாதத்தையும் கூட அவன் வழங்குகிறான், என்றும் அதனால் நிராகரிப்பவர்கள் ஆதரவாளர்களோ அல்லது உற்ற நண்பர்களோ இல்லாமல் பின்தங்கி இருப்பார்கள் என்று இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

"நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்" (அல் ஃபத்ஹ் 48:23)

உண்மையான முஸ்லிம்களுக்கு சாத்தியமான உதவிகள் அனைத்தையும் வழங்க அல்லாஹ் (தபாரக்) தானே பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதையும், இந்த மக்கள் எப்போதும் கண்ணியத்தையும் புகழையும் பெறுவார்கள் என்பதற்கு அவன் உறுதியளித்துள்ளான் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இது பின்வரும் இந்த வசனங்களின் மூலம் உறுதிப் படுத்தப் படுகின்றது:

“முஃமின்களுக்கு - நம்பிக்கை யாளர்களுக்கு உதவி புரிதல் நம் மீது கடமையாகும்". (அர் ரூம் 39:48)

“எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.” (ஆல இம்ரான் 3: 140)

“கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது” (அல் முனாஃபிகூன் 63:9)

இந்த புனிதமான அறிவிப்புகள் முஸ்லிம்களுக்கு, அவர்களது கண்ணியம், மகத்துவம், பெருமை, மரியாதை மற்றும் மதிப்பை மீட்டெடுக்கும் பாதையை
தெளிவாக நிரூபிக்கின்றன. அது உண்மையில் திடமான ஈமான் அதாவது நம்பிக்கையில் உள்ளது. அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் அவர்களின் தொடர்பு உறுதியாகவும், உண்மையாகவும் இருந்தால், அவர்கள் பூமியில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தி வழி நடத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், மறுபுறம், அவர்களின் நம்பிக்கை பலவீனமாகிவிட்டாலோ அல்லது இதயத்திலிருந்து வெளியேறி விட்டாலோ, தானாகவே நாம் அதாவது முஸ்லிம்கள் நிலைகுலைந்து, நமக்குப் பேரழிவு ஏற்பட்டுவிடும். இந்த குர்ஆன் வசனத்திலிருந்து இது தெளிவாகிறது:

"காலத்தின் மீது சத்தியமாக!நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர! (அல் அஸ்ர் 103:2-4)

முன்பு விளக்கியதைப் போன்று, ஆரம்பகால முஸ்லிம்கள் கௌரவத்திலும் மகத்துவத்திலும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அதேவேளையில் நவீன கால முஸ்லிம்கள் எதிர்திசையில் சென்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஆரம்பகால முஸ்லிம்களின் ஈமான் திடமாகவும் நேர்மையாகவும் மேலும் அவர்களின் குணாதிசயங்கள் மிகச் சிறந்ததாகவும் இருந்த காரணத்தால் அவர்கள் இந்த உயர்நிலையை அடைந்தார்கள் என்பது இவ்வசனங்களிலிருந்து தெளிவாகிறது.

இன்னொரு பக்கம் முஸ்லிம்களின் நிலை தற்காலத்தில் வருந்தத்தக்கதாக ஆகிவிட்டது. ஏனெனில் ஆரம்பகால முஸ்லீம்களிடம் நாம் காணும் தன்மைக்கு எதிரானதாக அவர்களின் நம்பிக்கையிலும் அவர்களின் குணங்களிலும் பல பலவீனங்கள் உள்ளன. எனவே, இனைறைய முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லீம்களாக உள்ளனர் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

இதே சூழல் நிலவுவதை அல்லாஹ்வின் உண்மையான தூதர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்கள் : "விரைவில் ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாம் பெயரளவில் மட்டுமே இருக்கும் குர்ஆன் அதன் எழுத்தளவில் மட்டுமே இருக்கும்”.

இன்றைய முஸ்லிம்களுக்கு இது தெளிவாகப் பொருந்தும். இத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்த குறிப்புகளை கூடிய விரைவில் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியமானதாகும்:

1. அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் அங்கீகரிக்கப்பட்ட, ஆன்மீக மற்றும் பௌதீக முன்னேற்றத்தை கொண்டுவரக் கூடிய உண்மையான இஸ்லாம் எங்கும் இல்லை என்பது உண்மை. அவ்வாறாயின் எந்த வழிவகைகளில் அந்த உண்மையான இஸ்லாத்தை நம்மால் மீண்டும் கண்டுக் கொள்ள முடியும்?

2. இந்த உண்மையான இஸ்லாத்தின் மறைதல் எதனால் ஏற்பட்டது? அதனுடன் சேர்ந்து 'இஸ்லாத்தின் (ரூஹ்) ஆன்மா' அழிவுக்கு காரணமான முஸ்லிம்களின் வாழ்க்கையை விட்டு ஏன் வெளியேறியது?

நாம் குர்ஆனைப் படிக்கும்போது, ​​உண்மையான ஈமானையும் இஸ்லாத்தையும் தேவையான அளவில் எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைத் தெளிவாகக் காண்போம், பின்னர் கண்ணியம் மற்றும் பெருமையின் பதவிகளை அடைதல் என்பது சிறப்புப் பணியைச் சார்ந்து இருக்கிறது. அதனை அல்லாஹ் (தபார) தனது எல்லையற்ற அருளால் முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்குகிறான். இதன் காரணமாகவே குர்ஆனில் முஸ்லிம்களுக்கு கைருல்-உம்மத் (மக்களில் சிறந்தவர்கள்) என்ற இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தீன்-ஏ-இஸ்லாத்தின் படி, அல்லாஹ்வின் புனிதத்தன்மை, தனித்துவத்தன்மை மற்றும் உன்னத இருப்பை நிறுவி நிரூபித்து மனிதர்கள் மூலம் அவனது எல்லையற்ற ஆற்றல்களையும், வரம்பில்லா குணங்களையும் காட்டுவதே பிரபஞ்சத்தை படைத்ததற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் ஆகும்.

உண்மையான அறிவின் ஒளியைக் கொண்டு மனிதனை வழிநடத்த முடியும், ஆனால் அதற்கு முன் அவர் முதலில் அனைத்து அசுத்தங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகளிலிருந்தும் தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தூய்மைப் படுத்துதலுக்குப் பிறகுதான் மனிதன் தன்னைத் தானே நல்ல குணங்களுடன் சரியாக்கிக் கொண்டு சிறந்த குணத்தையும் நன்மை செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும். இந்த காரணத்திற்காகவே அல்லாஹ் (தபாரக) மனிதனை தூய்மைப்படுத்தி [இன்சான்] அவனுக்குள் நன்மை செய்யும் திறனை வளர்த்தான். மேலும் முழு மனித இனத்தின் பரிபூரணமானவர் அனைத்து தூதர்களின் தலைவரான, நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் மூலமாகவே மனித இனம் முழுமையான தூய்மைப் படுத்துதலை அடையும் வரை மனம் மற்றும் உடலின் வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. அப்போதுதான் மனிதன் பின்வரும் வசனத்திலன் (மூலம்) நற்செய்தி கிடைக்கப் பெற்றான்:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது எனது அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்". (அல் மாயிதா 5:4)

மனிதனது படைப்பின் மிக உயர்ந்த நோக்கம் இறுதியாக நிறைவேறியது [இஸ்லாத்தில் நிறைவேறியது]; நன்மையும் தீமையும் தெளிவாக பிரிக்கப்பட வேண்டும்; ஒரு முழுமையான வாழ்க்கை முறை வெளிப்படுத்தப்பட்டது; மேலும் மிக முக்கியமானது (ஷரீஅத்) சட்டத்தைத் கொண்டுள்ள நுபுவ்வத்தின்

முன்னறிவித்தலின் சங்கிலி மற்றும் நபித்துவம் [நுபுவ்வத்] - முடிவடைந்து விட்டது, ஆயினும் அல்லாஹ் (தபாரக்) இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களின் நிலைத்திருத்தலுக்காக, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் சீர்திருத்தும் பணியை நிறைவேற்றுவதற்காக குர்ஆன் மற்றும் நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் சுவாசத்திலிருந்து வருகிற ஓர் இஸ்லாமிய நுபுவ்வத்தை பாதுகாத்து வைத்துள்ளான்.

தற்போது, ​ அத்தகைய ஒரு தீர்க்கதரிசி-சீர்திருத்தவாதியின் முன்னிலையில், இஸ்லாம் தனது வாழ்வை மீண்டும் பெறுகிறது, ஆனால் அவர் இல்லாத நிலையில், அத்தகைய சீர்திருத்தவாதி இன்னும் தோன்றவில்லை என்றால், பிறகு இஸ்லாத்தைப் பாதுகாப்பது உம்மத்தே முஹம்மதியாவின் (அதில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் முழுவதின் கூட்டமைப்பு) இன் கூட்டான பொறுப்பாக உள்ளது. இந்தப் பொறுப்பு பின்வரும் குர்ஆன் வசனங்களில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது:

"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக (முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றக் கூடிய) நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்". (ஆல இம்ரான் 3:111)

"(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்". (ஆல இம்ரான் 3:105)

முதல் வசனத்தில், முஸ்லிம்கள் ஏன் 'கைருல் உம்மத்' (மக்களில் சிறந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் (தபாரக) குறிப்பிட்டுள்ளான். அவர்கள் நல்லதை ஊக்குவித்து தீமையை தடை செய்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம் ஆகும். இரண்டாவது வசனத்தில் இந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் [பூமியின் மீதான] இந்த (உலக) வாழ்வில் வெற்றியடைந்து கௌரவத்தை- கண்ணியத்தை பெறுவர் என்பதை அல்லாஹ் (தபாரக) தெளிவுபடுத்தியுள்ளான்.

இந்த கட்டளை இத்துடன் நிற்காது. நாம் இந்த அவசியமான பணியைச் செய்யவில்லை என்றால், பிறகு சாபமும் பேரழிவும் நம் மீது ஏற்பட்டுவிடக்கூடும் என்று மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளான். (இறைவனது) இந்தத் தீர்மானத்தை (பின்வரும்)இந்த வசனத்தில் நம்மால் காண முடியும:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்". (அல் மாயிதா 5: 79-80)

ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் கூட இதனை விரிவாக விளக்கி, இந்த குர்ஆன் வசனங்களை இன்னும் தெளிவாக்குகின்றன.

அடுத்த வாரம் எனது குத்பாவில் இந்த ஹதீஸ்களுடன் வருகிறேன்.

உம்மத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனைகளை மற்றும் ஒருவருக்கு என்ன தேவை என்பதைப் பற்றி தொடர்ந்து விளக்கவும் இந்தப் பிரச்சனைகளை நீக்கி இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை [மீண்டும் ஒருமுறை] செயல்படுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுவானாக! ஷைத்தான் நம்மைப் பிளவுபடுத்தவும், நம்மிடையே பிரச்சனையையும் குஃப்ரை [அவநம்பிக்கையை]யும் விதைப்பதற்கு, எல்லா வகையிலும் முயன்று கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லீம்களை தமதுத் தூக்கத்திலிருந்தும் எழுந்திருக்க அல்லாஹ் அனுமதிப்பானாக! அல்லாஹ் இந்த முக்காடுகளை அகற்றி, இஸ்லாமியர்களை இஸ்லாத்திற்கு எதிரான போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும், அச்சத்துடனும்

அவன் நம்மை உண்மையான இஸ்லாதை நோக்கி முன்னேறச் செய்வானாக! ஆமீன்!

Copyright @ 2013 Sahih Al Islam .